தமிழ்நாடு

மானாமதுரையில் மறியல் செய்து போலீசாருடன் தள்ளுமுள்ளு: 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

7th Jul 2022 11:37 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநர் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியல் செய்து போலீசாருடன் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மானாமதுரை அருகே மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்முருகன் அருகே உள்ள பீசர்பட்டிணம் என்ற இடத்தில் மின்வேலியில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது சடலம் புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்றது.

செந்தில் முருகன் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மிளகனூர் கிராம மக்கள், செந்தில்முருகன் உறவினர்கள் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு பரிசோதனை செய்யப்பட்ட செந்தில்முருகன் உடலை வாங்க மறுத்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | தாளவாடியில் யானை தாக்கி விவசாயி பலி: யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு

அதைத்தொடர்ந்து அங்கிங்கிருந்த போலீசாருக்கும் மறியல் செய்து கொண்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீசார் மறியல் செய்தவர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர். போலீசாரிடம் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து வேனில்  ஏற்றி சென்றனர். 

அதைத்தொடர்ந்து சமரச பேச்சுக்குப் பின்னர் மறியல் கைவிடப்பட்டு செந்தில் முருகன் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டு மிளகனூர் கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். பின்பு போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவித்தனர். 

இந்நிலையில் மானாமதுரையில் அரசு மருத்துவமனை முன்பு மறியல் செய்து போலீசாருடன் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்டதாக  நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது பெயர்கள் குறிப்பிடப்படாமல் மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT