தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமா? நாமக்கல் திமுக மாநாடு

7th Jul 2022 03:21 AM |  எம்.மாரியப்பன்

ADVERTISEMENT

கடந்த மக்களவைத் தேர்தல் போல 2024 தேர்தலிலும் முழு வெற்றியைப் பெறுவதற்காகவே, மாநிலம் தழுவிய அளவில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து, நாமக்கல்லில் பிரம்மாண்ட மாநாட்டை திமுக தலைமை நடத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
 தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 39 இடங்களில், 38-இல் திமுக கூட்டணியும், ஓரிடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றன. 2024 மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளித்ததுடன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது.
 கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மக்களவைத் தேர்தலை குறிவைத்து அதன் தலைவர் கே.அண்ணாமலை திமுகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
 2024 மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 10 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவினர் உள்ளனர். திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாவட்டந்தோறும் பாஜக கூட்டங்களை நடத்தி வருகிறது. மக்கள் மத்தியில் வலுவான எதிர்க்கட்சியாக பாஜக உருவாகி வருவது ஆளும் திமுகவை யோசிக்க வைத்திருக்கிறது.
 வரும் தேர்தலில் கரூர் அல்லது நாமக்கல் தொகுதியில் போட்டியிட பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப இரு மாவட்டங்களிலும் பாஜகவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். எனவேதான் திமுக கரூரில் பிரம்மாண்ட முறையில் அரசு விழாவையும், நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டையும் அண்மையில் நடத்தியது.
 உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றிய மாவட்டங்களில் கரூர் முதலிடத்தையும், நாமக்கல் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. வழக்கமாக திமுக மாநாடு என்றால் அது திருச்சியில்தான் நடைபெறும். இந்த முறை நாமக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலினே தேர்வு செய்ததற்கு அது காரணமாக இருக்கலாம்.
 மாநாட்டில் பேசும்போது, "திமுக கோட்டையாக நாமக்கல் மாறியுள்ளது. கரூரில் எவ்வாறு மக்கள் கூட்டத்தைப் பார்த்து வியந்தேனோ, அதேபோல நாமக்கல்லிலும் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்றதைக் கண்டேன்' என்றார் முதல்வர் ஸ்டாலின்.
 இந்த மாநாட்டில் பங்கேற்ற பேச்சாளர்கள் பலரும் மறைமுகமாக பாஜகவை விமர்சித்தனர். திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான ஆ.ராசா ஒருபடி மேலே போய், "தமிழ்நாட்டை தனிநாடாக மாற்ற வைத்து விடாதீர்கள்' என மத்திய பாஜக அரசை எச்சரித்தார். மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா, "இந்திய அளவில் பெருந்தலைவராக மு.க.ஸ்டாலின் வலம் வருவார்' என்றார். இறுதியில் தலைமை உரையாற்றிய முதல்வர், அவர்கள் பேசியதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்ற திமுகவைச் சேர்ந்த பெண்களில் பலர் கணவரின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதும், மக்கள் குறைகளைத் தெரிவிக்கும்போது கவுன்சிலருக்கு மாற்றாக அவர்களின் கணவர்கள் பேசுவதும், மிரட்டுவதும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் இறுதியாகப் பேசிய முதல்வர், "உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். ஒழுங்கீனம், முறைகேடு செயல்களில் யாராவது ஈடுபட்டால் சட்டரீதியாகவும், கட்சி ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்' என எச்சரித்தார்.
 "எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மிகுந்த சவாலானதாக இருக்கும். உள்கட்சிப் பூசலால் செல்வாக்கை அதிமுக இழந்துவரும் நிலையில், அந்த இடத்தைக் கைப்பற்றி திமுகவுக்கு எதிரான சக்தியாக உருவெடுக்கும் முயற்சியில் பாஜக உள்ளது. நாமக்கல் தொகுதியில் அந்தக் கட்சியின் தலைவர் அண்ணாமலை போட்டியிட இருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில், மக்களவைத் தேர்தலில் பாஜகவை தலைதூக்க விடக் கூடாது என்ற நோக்கில்தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் 9,000 பேர் பங்கேற்ற மாநாட்டை நடத்தியது' என்று திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
 2024 மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாக நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றதாக பரவலாகக் கருதப்படுகிறது.
 
 
 
 

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT