தமிழ்நாடு

"நமது அம்மா' வெளியீட்டாளர், ஒப்பந்ததாரர் வீடு, இடங்களில் வருமானவரி சோதனை

7th Jul 2022 03:28 AM

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளரும், "நமது அம்மா' நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர், அருப்புக்கோட்டை ஒப்பந்ததாரர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: "நமது அம்மா' நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. சென்னையில் அவருக்கு தொடர்புடைய 7-க்கும் மேற்பட்ட இடங்களிலும், கோவையிலும் உள்ள சந்திரசேகர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
 கோவையில் உள்ள சந்திரசேகர் வீட்டில் 5 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை காலை 11 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். இதேபோல, கோவை வடவள்ளியில் உள்ள சந்திரசேகரின் சகோதரர் வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, அவிநாசி சாலையில் உள்ள சந்திரசேகரின் அலுவலகம் உள்பட 6 இடங்களில் சோதனைகள் தொடர்ந்தன. இந்த சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.
 கட்டுமான நிறுவனத்தில்...: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாத்துரை என்பவர் நடத்தி வரும் எஸ்பிகே என்ற கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது. அதனடிப்படையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 12 இடங்களுக்கு மேல் சோதனை நடைபெற்றது.
 அருப்புக்கோட்டையில்...: அருப்புக்கோட்டைக்கு புதன்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் 5 கார்களில் சுமார் 20 வருமானவரித் துறை அதிகாரிகள் வந்து எஸ்பிகே நிறுவனத்திலும், அதன் பின்புறம் உள்ள செய்யாத்துரை வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 கமுதியில்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழமுடிமன்னார் கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் பூர்விக வீட்டிலும் 8 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் சோதனை நடத்தினர்.
 வரி ஏய்ப்பு நடைபெற்றதாக இதே நிறுவனத்தில் 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT