தமிழ்நாடு

வயலில் திருவள்ளுவர் திருவுருவத்தில் நடவு செய்த விவசாயி!

7th Jul 2022 12:43 PM

ADVERTISEMENT


இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வயலில் திருவள்ளுவர் திருவுருவத்தில் நடவு செய்துள்ளார் தஞ்சை விவசாயி. 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி. இவர் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவத்தை கொண்டு நடவு செய்துள்ளார்.

சின்னார் என்ற நெல் ரகத்தினாலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். 

இதனைக் கழுகுப் பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையிலான முழு உருவத்தை காட்டுகிறது என்பது சிறப்பம்சம். 

ADVERTISEMENT

வயலில் திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கிய விவசாயிக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இதையும் படிக்க | ரூ. 55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி வரி கட்டுகிறாரே அது எப்படி?

இது குறித்து இயற்கை விவசாயி இளங்கோவன் கூறுகையில், நான் இயற்கை விவசாயத்தை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வந்தேன்.

அதுபோல இந்த ஆண்டும் 2000 ஆண்டுகளுக்கு  முன்பு திருவள்ளுவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதி உள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில், திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடவு செய்ய கடந்த ஆண்டு முதல் நினைத்து வந்தேன். அதனைத் தொடர்ந்து  இதனைக் கடந்த 5 நாள்களாக நான் தனி ஆளாக நின்று நட்டுள்ளேன். 

இதனைத் தொடர்ந்து எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நட உள்ளேன் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT