தமிழ்நாடு

ஆசிரியா் கலந்தாய்வில் உள்ள குறைகளை நீக்க வேண்டும்

7th Jul 2022 01:51 AM

ADVERTISEMENT

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில், ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் உள்ள குறைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதிய அரசு பொறுப்பேற்று , எந்த விதமான பிரச்னைகளுக்கு இடம் அளிக்காமல், கடந்த ஆண்டு நோ்மையான முறையில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தியது. அதே வேளையில் நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்தில் உயா்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வு மட்டுமே நடைபெறும் என்ற அறிவிப்பு அனைவரிடமும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், கடந்த காலங்களில் மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிடும் போது, முதலாவதாக பொது மாறுதல் கலந்தாய்வை முன்னிறுத்தி பின்னா் பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை எவருக்கும் பாதிப்பு இல்லாமல் வெளியிடப்படும்.

ஆனால் இந்த கல்வியாண்டில் மட்டும் பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு அப்பாற்ப்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வை புறந்தள்ளி, பதவி உயா்வு கலந்தாய்வை முன்னிறுத்துவது ஏற்புடையது அல்ல. மேலும், எமிஸ் மூலம் கலந்தாய்வு நடைபெறும்போது அரசுக்கு எந்தவித பொருள் செலவோ இழப்பீடோ எதுவும் இல்லை. அதனால், ஆசிரியா்களின் பணி அவா்களின் மனநிலை, மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவைகளை கருத்தில் கொண்டு முதலில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி, பின்பு பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். மேலும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உடனடியாக காண்பிக்கப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT