தமிழ்நாடு

தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி உணவு மானிய நிலுவை மத்திய அரசு வழங்க ஒப்புதல்- அமைச்சர் அர.சக்கரபாணி

தினமணி

தமிழகத்துக்கு உரிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூ. 2,000 கோடியை விரைவில் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தகவலை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தில்லியில் நடைபெற்ற உணவு - ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிகழாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்பட்டதன் மூலம் நெல் அறுவடையும் செப்டம்பரில் நடைபெறும் என்பதால், நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது.
தமிழகத்துக்கு பொது விநியோகத்துக்கான உணவு மானியம் நீண்ட காலமாக (5 ஆண்டுகள்) வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்த விவரங்கள் முழுமையாக கணக்கிடப்பட்டதில் சுமார் ரூ.2,000 கோடி நிலுவையில் உள்ளது. இதை உணவுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனும், நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகரனும் மத்திய உணவு, பொது விநியோகத் துறை கூடுதல் செயலர், இணைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.
தமிழக விவரங்களை பெற்றுக் கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் உடனடியாக நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதுபோன்ற விவரங்களை அளிக்கும் மாநிலங்களுக்கு மானிய நிலுவைத் தொகை ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குள் வட்டியுடன் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் மாநாட்டில் உறுதியளித்தார்.
நியாயவிலைக் கடைகளில் வசதிகள்: தமிழகத்தில் நியாயவிலை கடைகள், பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்களுக்கான (கழிவறை) வசதிகளுடன் புதிதாக கட்டப்படுவதைப் பற்றி தமிழக உணவுத் துறைச் செயலர் தில்லி மாநாட்டில் விளக்கினார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி கலைஞர் உணவகங்கள் பேரூராட்சிப் பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் வருங்காலங்களில் திறக்கப்படும் என்றார் அமைச்சர்.
பொது விநியோகத் திட்டம்: முன்னதாக, தேசிய மாநாட்டில் அர.சக்கரபாணி பேசுகையில், "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருள்கள் வழங்கும் பொருட்டு "சிறப்பு பொது விநியோகத் திட்டம்', பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஐந்து நாள்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கரோனா காலத்திலும், பின்னர் கடந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களையும் வழங்கியது. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நீதி ஆயோக் வெளியிட்ட பல்முனை வறுமைக் குறியீடு அறிக்கையில், தமிழக மக்கள் தொகையில் 4.98 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர் என்றும், இதற்கு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கம்: 9-ஆவது இடத்தில் தமிழகம்
நிகழாண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சிறப்பாக அமலாக்கம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் ஒடிஸாவும், இரண்டாம் இடத்தில் உத்தர பிரதேசமும், மூன்றாம் இடத்தில் ஆந்திரமும் உள்ளன.
இந்தப் பட்டியலை மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
இதன்மூலம் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சுமார் 80 கோடி பேருக்கு உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.
மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை கிலோவுக்கு ரூ. 1 முதல் ரூ.3 வரையில் மத்திய அரசு அளிக்கிறது.




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT