தமிழ்நாடு

விபத்தில் இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் வழங்கினார்

6th Jul 2022 02:39 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.3 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (6.7.2022) தலைமைச்  செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமானத் தொழிலாளர்களின் நியமனதாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகை வழங்கிடும் அடையாளமாக 7 நியமனதாரர்கள்/வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார். 

தமிழ்நாடு அரசால்  கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும்  தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்  தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலமாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டுமான பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம்  நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரைக்கேற்ப வாரியத்தில் நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் அதாவது 7.05.2021 முதல் 31.05.2022 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2,23,499 பயனாளிகளுக்கு 189 கோடியே 92 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டு காலத்தில்  அதாவது 7.05.2021 முதல்  31.05.2022 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 6,21,351  தொழிலாளர்கள் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

30.04.2021 வரை பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் வாயிலாக ரூ.5 இலட்சம்  நிவாரணம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 60 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் 3 கோடி ரூபாய் நிவாரணத் தொகைக்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்  நலவாரிய தலைவர் பொன்குமார்,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ,ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், இ,ஆ.ப., முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ,ஆ.ப.,ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT