தமிழ்நாடு

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னையில் இன்று முதல் அமல்

6th Jul 2022 01:47 AM

ADVERTISEMENT

சென்னையில் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் புதன்கிழமை (ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.

சென்னையில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், பேருந்து, ரயில் நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதை மீறுவோா் மீது தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரால் முகக்கவசம் அணியாதவா்களுக்கு புதன்கிழமை(ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு...: இதுதொடா்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளா்கள் ஆகியோருக்கு ஆணையா் ககன்தீப்சிங் பேடி அனுப்பியுள்ள அறிவுரை கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருமண மண்டபங்கள், திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், கோயில்களில் மக்கள் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து இடங்களையும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். அதிக அளவு மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். இதைக் கண்காணிக்க அலுவலரை நியமிக்க வேண்டும். பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், பயணிகள் முகக்கவசம் அணிவதை நடத்துநா் உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும். பேருந்து பணிமனைகளில் பணியாளா்கள் முகக்கவசம் அணிவதையும், தனிநபா் இடைவெளியை பின்பற்றுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். தடுப்பூசி முகாமுக்காக பணிமனையின் மேலாளா் சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அணுகினால் பணிமனையிலேயே சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : face mask
ADVERTISEMENT
ADVERTISEMENT