தமிழ்நாடு

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி மனு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

6th Jul 2022 02:00 AM

ADVERTISEMENT

வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை, உயா் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 6) விசாரிக்கவுள்ளது.

சென்னையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், மீண்டும் பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என அந்தக் கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் அறிவித்தாா்.

இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீா்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சாா்பில் திங்கள்கிழமை அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அழைப்பிதழை பன்னீா்செல்வம் தரப்பினா் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனா்.

இந்த நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ‘அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ் 15 நாள்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு நடப்பதாக திங்கள்கிழமை மாலைதான் எனக்கு அழைப்பிதழ் வந்தது.

ADVERTISEMENT

ஒருங்கிணைப்பாளா்கள் ஒப்புதல் இல்லாமல் பொதுக் குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு முரணானது. கட்சி விதிகளின்படி பொதுக் குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களைக் கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஒப்புதல் அவசியம். எனவே, ஜூலை 11-இல் நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் முறையீடு செய்தனா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT