தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தந்திக்கால் வாய்க்கால், போரூர் உபரிநீர் கால்வாய் மற்றும் வரதராஜபுரம், ராயப்பா நகரின் வெளிவட்ட சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் பருவ மழைக்குள் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று முதல்வர் ஆய்வு செய்து, வரும் பருவமழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி தமிழகமெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் பகுதி

கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், வெள்ளப் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத்  தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கொளுத்துவான்சேரி சாலையில் 16 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தந்திக்கால் கால்வாய் முதல் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் வரை புதிய மூடுதளத்துடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள தந்திக்கால் வாய்க்காலில் நடைபெற்று வரும் உபரிநீர் போக்கி மற்றும் கதவுகள் அமைக்கும் பணியினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இவ்வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

தந்திக்கால் கால்வாய்

பின்னர், போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் மற்றும் ஒழுங்கியம் அமைக்கும் பணியில்,  உள்வட்ட சாலையில் அமைந்துள்ள போரூர் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தாம்பரம் பகுதிக்கு அருகில் அடையாறு ஆற்றுப் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து தவிர்க்கும் பொருட்டு, 70 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சோமங்களம் கிளை ஆற்றிலிருந்து ஒரு புறவழி பெரு மூடு வடிகால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் L.S. 5970 மீட்டர் முதல் L.S. 19150 மீட்டர் வரை வெள்ள நீர் கடத்தும் திறனை அதிகப்படுத்தும் பணியில், வரதராஜபுரம், ராயப்பா நகர், வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் மூடுதள கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டார். அப்போது, வெள்ளத்தடுப்பு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT