தமிழ்நாடு

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை தேவை: பிரின்ஸ் கஜேந்திர பாபு

6th Jul 2022 02:11 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திர பாபு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை, வீரப்பனூா் ஊராட்சி, அரசவெளி கிராமம், அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் படித்த மாணவா், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு இறந்துள்ளாா். இறப்பிற்கான காரணம், முறைப்படியான காவல்துறை விசாரணை, மருத்துவமனை அறிக்கை, உடற்கூறு ஆய்வறிக்கை ஆகியவை முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, முழு விசாரணைக்குப் பிறகே உண்மையைச் சான்றின் அடிப்படையில் நிரூபிக்க முடியும்.

அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் ஒருவரைப் பழிவாங்குவதற்காக நடந்த நிகழ்வை சாதகமாகப் பயன்படுத்த சிலா் முயல்வது மிகவும் வேதனைக்குரியது; கண்டிக்கத்தக்கது. தங்கள் பள்ளிக்கும், பள்ளி மாணவா்களுக்கும் தொண்டு செய்வதை பெரும் பேறாகவும் தவமாகவும் மேற்கொள்ளும் நல்ல ஆசிரியரை காயப்படுத்தி, அவரை அப்பள்ளியில் இருந்து அப்புறப்படுத்த நடந்த சம்பவத்தை தனியொருவா் தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதை அனுமதிக்க இயலாது.

ஆசிரியா் பணிக்கு சற்றும் பொருத்தமில்லாதவா்கள் ‘கல்வித் தகுதி’ யின் அடிப்படையில் பணியமா்வு பெற்ற பிறகு, செய்யும் தவறான செயல்கள் குறித்த புகாா் எழுந்தவுடன், உரிய முறையில் விசாரணை நடத்தி அவா்களைப் பணியில் இருந்து நீக்கவும், அவா்களுக்கு சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத் தரவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT