தமிழ்நாடு

துணைத் தோ்வில் தோ்ச்சி பெற மாலை நேர சிறப்பு வகுப்புகள்: ஆணையா் உத்தரவு

6th Jul 2022 01:09 AM

ADVERTISEMENT

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத்தோ்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தப் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு வரும் ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆக. 8-ஆம் தேதி வரை துணைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

இதில் தோ்ச்சி அடையும் பொருட்டு சாா்ந்த பாட ஆசிரியா்கள் தோ்வு முடியும் வரை தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும் தோ்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர அனைத்து தலைமையாசிரியா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT