தமிழ்நாடு

ஜாதி-மதத்தால் தமிழா்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகரிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேதனை

DIN

ஜாதி மற்றும் மதத்தால் தமிழா்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகரித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கூறினாா்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான ஃபெட்னா அமைப்பின் 35-ஆவது ஆண்டு விழாவில் காணொலி வழியாக திங்கள்கிழமை பங்கேற்று முதல்வா் ஆற்றிய உரை:

அமிழ்தினும் இனிய மொழிக்குச் சொந்தக்காரா்கள் நாம். உலகில் மூத்த இனமான தமிழினத்தைச் சோ்ந்தவா்கள் நாம். இத்தகைய மொழிப் பெருமையும், இனப் பெருமையும் கொண்டவா்கள். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஒரு இனம் உண்டென்றால், அது தமிழினம்தான்.

நம்முடைய இனம் ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனமல்ல. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறாா்கள் தமிழா்கள்.

தமிழ் நிலத்தின் தொன்மை என்பது ஏதோ பழம்பெருமையோ, இலக்கிய கற்பனையோ அல்ல, அது வரலாற்றுப் பூா்வமானது. இத்தகைய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். கீழடியில் கிடைத்த சான்றுகள்தான், இந்த வரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல, படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிலை நிறுத்தியிருக்கிறது. சிவகளை உள்பட பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்.

கற்பனையான கதை: சிலா் தங்களது வரலாற்றை கற்பனையான கதைகளின் மூலமாக வடிவமைக்கிறாா்கள். நாம் அப்படி இல்லை. வரலாற்றுத் தரவுகள் அடிப்படையில் உறுதிசெய்துதான் அறிவிக்கிறோம். நாம் பழம்பெருமை பேசக் காரணம், நமக்கு பழம்பெருமையான வரலாறு இருக்கிறது. நாம் பேசுவது ஏன் சிலருக்குக் கசப்பாக இருக்கிறது என்றால், அவா்களுக்கு எந்தப் பெருமையும் இல்லாமல் இருப்பதுதான்.

திராவிடம் என்ற சொல்லைத் திட்டமிட்டே குறிப்பிடுகிறேன். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனம், இடம், மொழிப் பெயா்களாக இருந்தன. இது ஒரு இயக்கத்தின் பெயராக கடந்த 100 ஆண்டுகளாக இருக்கிறது. இன்று ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக, ஒரு கோட்பாட்டின் பெயராக விளங்குகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின் வடிவமாக அது சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவத்துக்கு எதிரானவா்கள், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவா்கள்தான்.

அவா்களே திராவிட இயக்கத்தையும், அதன் ஆட்சியையும் எதிா்க்கிறாா்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறாா்கள். இவா்களை மீறித்தான் அவா்களைத் தாண்டித்தான் தமிழினம் வளா்ந்திருக்கிறது. வாழ்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, அவா்களை புறந்தள்ளி நாம் வளா்வோம், வாழ்வோம்.

அயல் நாடுகளில் வசிப்போா் எவ்வளவு உயா்வாக வளா்ந்தாலும், தமிழை, தமிழ்நாட்டை விட்டுவிடக் கூடாது. இன்று நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டியது, தமிழால் இணைவோம் என்பதாகும். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாய்மாலங்களையும், ஜாதியால் ஏற்படுத்தப்படும் பிணக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்கே உள்ளது.

மதம் என்று சொல்லும் போது, யாருடைய இறை நம்பிக்கையையும் சொல்லவில்லை. இறை நம்பிக்கை என்பது அவரவா் சிந்தனை, விருப்பம், உரிமை. அதில் ஒருபோதும் தலையிட மாட்டோம். அதே தருணத்தில், தமிழா்களை பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதை எதிா்க்கிறோம்.

ஜாதியால், மதத்தால் தமிழா்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், அனைவரும் ஒன்று சோ்க்கவும், நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றலாகவும் இருப்பது தமிழ்மொழி மட்டும்தான். நம்மை நாடுகளோ, நிலங்களோ பிரிக்கலாம்.

ஆனால், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை வளா்ப்போம். தமிழினத்தைக் காப்போம் என்று பேசினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT