தமிழ்நாடு

பொதுச் செயலாளர் பதவி: எம்ஜிஆர் சொன்னது என்ன?

5th Jul 2022 03:47 PM

ADVERTISEMENT

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி  பழனிசாமி இடையே அவ்வப்போது இருந்துவந்த மோதல், சமீபத்தில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வரை வந்துள்ளது. 

கடந்த  ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றன. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாகவும் அடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில்தான் வருகிற ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பொதுச் செயலாளர் பதவியைக் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராகவும் நியமிக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

மறுபுறம் ஓபிஎஸ் சட்டரீதியாக நீதிமன்ற வழக்குகளின் மூலம் இபிஎஸ்ஸின்  முயற்சிகளை முறியடிக்க திட்டம் வகுத்து வருகிறார். 

இதையும் படிக்க | அதிமுக பொதுச் செயலாளராகிறாரா இபிஎஸ்?

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வர முடியுமா? பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய என்ன தகுதி? என்பதற்கெல்லாம் விடை எம்ஜிஆர் எழுதி வைத்த உயில்தான். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ராமச்சந்திரன்(எம்ஜிஆர்). அவர் இறப்பதற்கு முன்னதாகவே உயில் எழுதி வைத்திருக்கிறார். 

1988 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி, எம்ஜிஆரின் மனைவி ஜானகி மற்றும் அப்போதைய அதிமுக தலைமைக் கழகத் தலைவர் ஈ.வி.வள்ளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் எம்ஜிஆரின் உயில் வாசிக்கப்பட்டது. 

அவர் தனது உயிலில், '80 சதவிகித கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படும்பட்சத்தில், சத்யா ஸ்டுடியோவுடனான தனது பங்குகள் மற்றும் இதர சொத்துக்கள் அதிமுகவிற்குச் செல்லும். 

ஒருவேளை கட்சியில் பிளவு ஏற்பட்டாலோ அல்லது கலைக்கப்பட்டலோ, காது கேளாதவர்களுக்காக எனது பெயரில் நடத்தப்படும் அறக்கட்டளையை நிர்வகிக்க சத்யா ஸ்டுடியோஸ் பங்குகளை பயன்படுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்ஜிஆர் கொண்டு வந்த நிரந்தர விதியை ஜெயலலிதாவும் பின்னாளில் வலியுறுத்தினார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க |  ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

மேலும், கட்சி வலுவான ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் 80 சதவீத உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் எம்ஜிஆர் வலியுறுத்தியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது. 

திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை வலியுறுத்தி பேசியுள்ளார். 'எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த நிர்வாகியின் தேர்தலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் தற்போது கட்சியில் நிர்வாகி என யாரும் இல்லை. அனைவருமே கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான்' என்று கூறியுள்ளார். 

எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் இதன் அடிப்படையிலேயே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என அதிமுகவின் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். 

நிர்வாகிகளை வைத்து அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என இபிஎஸ் நினைத்துக்கொண்டிருக்கும் சூழலில் எம்ஜிஆரின் உயில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையும் படிக்க |  முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT