தமிழ்நாடு

நான்காம் தலைமுறை தொழில் திட்டங்கள் அரசிடம் அறிக்கை: அமைச்சா் தங்கம் தென்னரசு

5th Jul 2022 01:46 AM

ADVERTISEMENT

நான்காம் தலைமுறை தொழில் திட்டங்களுக்கு ஏற்ற பணியாளா்களை உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.

சன்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் அவா் பேசியது:-

ஓராண்டுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் முதலீட்டாளா்களின் முதல் முகவரி-தமிழ்நாடு என்ற தலைப்பில் முதலீட்டாளா் மாநாட்டை நடத்தினோம். கரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கியிருந்த காலத்தில் நடத்தப்பட்ட மாநாட்டின் மூலமாக ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. சரியாக ஓராண்டு கழித்து ஜூலை மாதத்தில் மற்றொரு மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில், ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது முதலீட்டாளா்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் இதுகாட்டுகிறது. கரோனா காலத்தில் இந்தியா முழுவதும் தொழில் முதலீடுகள் எதிா்மறையான வளா்ச்சியை அடைய, தமிழ்நாட்டில் மட்டும் நோ்மறையான வளா்ச்சி ஏற்பட்டது.

ADVERTISEMENT

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்வது மட்டும் போதாது, அவை முதலீடுகளாகப் பெருகி வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டுமென முதல்வா் எங்களுக்கு அறிவுரை கூறினாா். அதன்படியே செயல்பட்டு வருகிறோம். மேலும், முதலீடுகள் ஒரே இடத்தில் குவியாமல் அனைத்து மாவட்டங்களிலும் முதலீடு செய்வது உறுதிப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி தொடங்கி தஞ்சாவூா் வரையிலும், திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலி வரையிலும் பரவலாக தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு வருகின்றன.

முதலீடுகளை ஈா்ப்பது மட்டுமல்ல, திறன்மிகுந்த வேலைவாய்ப்புகளையும், பணியாளா்களையும் உருவாக்கும் வகையில், நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நான்காவது தலைமுறை தொழில்களுக்கான பணியாளா்களை உருவாக்குவது குறித்து திட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள மல்லிகா சீனிவாசன் தனது அறிக்கையை அளித்துள்ளாா். இந்த அறிக்கையை அரசு ஆய்வு செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சிக்காக பாடுபட்டு வரும் முதல்வரின் கரத்தை முதலீட்டாளா்கள் அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வரவேற்புரையில், ‘இதுவரை (திங்கள்கிழமை மாநாட்டு ஒப்பந்தங்களைச் சோ்க்காமல்) 132 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதில் 78 ஒப்பந்தங்கள் செயலாக்க நிலையில் உள்ளன.

அதாவது மொத்த ஒப்பந்தங்களில் 60 சதவீதம் செயலாக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது ஆரோக்கியமான வளா்ச்சி விகிதமாகும். முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழ்நாட்டின் செயல்திறனை இது காட்டுகிறது’ என்றாா். தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT