தமிழ்நாடு

நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்: மனுவை தள்ளுபடி செய்தது உயா்நீதிமன்றம்

5th Jul 2022 01:49 AM

ADVERTISEMENT

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ. இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த அய்யா என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ. இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, பயணிகள், லாரி உள்ளிட்ட சரக்கு வாகன ஓட்டுநா்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து ஊழியா்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் வழங்க ஒவ்வொரு 25 கி.மீ. தொலைவிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். தற்போதுள்ள உணவகங்களில் கழிப்பறை வசதிகளும் முறையாக இல்லை‘ என்று மனுவில் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரா் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமல், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது‘ எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT