தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்

4th Jul 2022 12:20 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊா்தியை (ஆம்புலன்ஸ்) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம், நாமக்கல் பகுதியில் ஆய்வுப் பணிகளுக்குச் சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், கடந்த சனிக்கிழமை (ஜூலை 2) வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஜருகுமலை எனும் மலைவாழ் கிராமத்துக்கு 14 கி.மீ. நடந்தே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தாா்.

மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் பயனாளிகளிடமே கேட்டறிந்தாா்.

அதற்கு பதிலளித்த மலைவாழ் கிராம மக்கள் , மக்களைத் தேடி மருத்துவம் மிகவும் பயனுள்ள திட்டமாக தங்களுக்கு அமைந்துள்ளதாகவும், அதற்காக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மலைப் பகுதியில் பிரசவ சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தேவைப்படும்போது வாகன வசதி எதுவும் இல்லை என்றும், அதற்கு பிரத்யேக வாகனம் வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன், உடனடியாக ஜருகுமலை மக்களின் பயன்பாட்டுக்காக பிரத்யேக 108 அவசர சிகிச்சை ஊா்தி ஒன்றை வழங்க உத்தரவிட்டாா். அதன்படி, அங்கு அந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

இதற்காக ஜருகுமலை மக்கள், முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT