தமிழ்நாடு

3 மாதங்களில் மின்சாரம் பாய்ந்து 97 மின் ஊழியர்கள் பலி!

DIN

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மின்சாரம் பாய்ந்து 97 மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதாவது ஜனவரி முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட 97 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக அரசு புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இதனால், மேற்கொண்டு மின் விபத்து உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து தலைமை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக தலைமை அலுவலர் தெரிவித்ததாவது, ''ஊழியர்களுக்கு மாதமொரு முறை பாதுகாப்பு தொடர்பான வகுப்புகள் எடுக்க தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், களப்பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு, காலணிகள், தலைக்கவசம், பாதுகாப்பு உடைகள், ரப்பர் கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 

மாநிலம் முழுவதுமுள்ள பழுதடைந்த துளைகள், மின் தடங்கள் மற்றும் பழைய மின் சாதனங்களை மாற்றியமைக்க அனைத்து அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். 

ஆனால், களப்பணியாளர்களுக்கு முறையாக பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என பாரதிய மின் தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் செயலாளர் ஆர்.முரளிதரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் சார்பில் தமிழகம் முழுக்க 9,523 கேங்மேன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கேங்மேன் பணிக்கான தகுதி 4ஆம் வகுப்புதான். ஆனால், பொறியியல் மற்றும் முதுகலை பயின்றவர்கள் கேங்மேன் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேங்மேன்கள் செய்யும் களப்பணிகளை அவர்களால் செய்யமுடியவில்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் 15 கேங்மேன்கள் உயிரிழந்தனர். 85 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் இதில் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரினார்.
 
பாரதிய மின் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சரவணன், ''50 ஆயிரம் ஊழியர்களை மின்வாரியத்தில் உடனடியாக நியமிக்க வேண்டியது அவசியம். ஊழியர்கள் பற்றாக்குறையால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் இறந்தார். அவர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டார். அவரது குடும்பத்திற்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனால், கடைநிலை ஊழியர்கள் வரையிலான பிரச்னைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் கண்காணிக்க வேண்டும்'' என கோரினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT