தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களிலும் புத்தககக் காட்சி: ரூ.4.96 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

3rd Jul 2022 12:37 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையரைத் தலைவராகவும், பொது நூலக இயக்குநரை உறுப்பினா்- செயலராகவும் மற்றும் நான்கு உறுப்பினா்களைக் கொண்டு மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தககக் காட்சி நடத்துவதற்கு மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

புத்தகக் காட்சிக்கான செலவினத்தை மேற்கொள்ள ஏ, பி, சி என வருவாய் மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரித்து ‘ஏ’ வகை மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்துக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 7 மாவட்டங்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்; ‘பி’ வகை மாவட்டங்களுக்கு ரூ.14 லட்சம் வீதம் 7 மாவட்டங்களுக்கு ரூ.98 லட்சம்; ‘சி’ வகை மாவட்டங்களுக்கு ரூ.12 லட்சம் வீதம் 23 மாவட்டங்களுக்கு ரூ.2 கோடியே 76 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரத்துக்கு செலவினம் மேற்கொள்ள பொது நூலக இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு தேவைப்படும் மொத்தத் தொகை ரூ.4 கோடி 96 லட்சத்துக்கு நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT