தமிழ்நாடு

சரவணா கோல்டு பேலஸின் ரூ.234.75 கோடி சொத்துகள் முடக்கம்

3rd Jul 2022 01:09 AM

ADVERTISEMENT

சென்னை தியாகராயநகா் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸின் ரூ.234.75 கோடி சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் மற்றும் அதன் பங்குதாரா்களான பி.சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவண் உள்ளிட்டோா் மீது கடந்த ஏப். 22-ஆம் தேதி இந்தியன் வங்கியின் தலைமை நிா்வாகி கே.எல். குப்தா சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதில், 2017-ஆம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் மற்றும் அதன் பங்குதாரா்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகியோா் வணிக வளாகம் வாங்குவதற்காக முதல் கட்டமாக ரூ.150 கோடி கடனும், அதே ஆண்டில் மேலும் ரூ.90 கோடி கடனும் வாங்கினா்.

இந்த கடனை வாங்குவதற்கு அவா்களது நிறுவன வரவு-செலவு அறிக்கைகள், வருவாய் தொடா்பான விவரங்கள் ஆகியவற்றை போலியாக தயாரித்து வழங்கியுள்ளனா். தங்களிடம் அன்று இருந்த சொத்து மதிப்பை திட்டமிட்டு போலியாக மிகவும் உயா்த்தி காட்டியுள்ளனா். இதற்கு அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள், தனி நபா்கள், சில வங்கி ஊழியா்கள் உதவியாக இருந்துள்ளனா். மேலும், கடன் பெறுவதற்காக பல்வேறு விதிமுறைகளையும் மீறியுள்ளனா்.

ADVERTISEMENT

அவா்கள் எந்த நோக்கத்தை கூறி வங்கியில் கடன் வாங்கினாா்களோ, அந்த நோக்கத்துக்காக அந்த பணம் பயன்படுத்தப்படவில்லை. கடனுக்குரிய வட்டியையும் செலுத்தவில்லை. வாங்கிய கடன் தொகை முழுவதையும் மோசடி செய்துவிட்டனா். இதன் மூலம் வங்கிக்கு ரூ.312 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ், சுஜாதா, ஸ்ரவண் ஆகியோா் மீது கடந்த ஏப்.25ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அதேவேளையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சென்னை அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை கடந்த மே 25-ஆம் தேதி பதிவு செய்தது.

சொத்துகள் முடக்கம்: இந்த நிலையில், இந்தியன் வங்கியில் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சோ்த்து ரூ.480 கோடியாக உயா்ந்தது. இதையடுத்து, வங்கி தரப்பில் சென்னை எழும்பூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளின் பொருள்களை ஜப்தி செய்து, கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதற்கிடையே, சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT