தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் ஜனவரியில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு தகவல்

3rd Jul 2022 12:34 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக சனிக்கிழமை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது:

நெல்லையப்பா் திருக்கோயில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படவுள்ளது. 13 திருக்கோயில்களுக்கு பேட்டரி காா்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கெனவே அருள்மிகு பட்டீஸ்வரா் திருக்கோயில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் பேட்டரி காா் வாங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 திருக்கோயில்களில் அடுத்த மாதத்துக்குள் பேட்டரி காா் வாங்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய 6 அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகள், இசைப் பள்ளிகள் தொடங்குவது குறித்தும், அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்து அறிவுரைகளை வழங்கி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT