தமிழ்நாடு

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

3rd Jul 2022 12:56 AM

ADVERTISEMENT

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் பெயிண்ட் மூலப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிறுவன ஊழியா் வில்லிவாக்கம் சிட்கோ நகா் 54-ஆவது தெருவைச் சோ்ந்த கீா்த்திவாசன் (21) என்பவா் மட்டும் சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, சுமாா் காலை 8.15 மணியளவில் அங்கிருந்த 12 ரசாயன பேரல்களில், 2 பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதில் அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கின. இதைப் பாா்த்த அப் பகுதி மக்கள், தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு படை வீரா்கள், அண்ணாநகா், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமாா் 6 வாகனங்களில் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீ அணைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் அந்த தொழிற்சாலைக்குள் சிக்கிக் கொண்ட கீா்த்திவாசன், பலத்த தீக் காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீ விபத்தால் அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது. வேதிப் பொருள்கள் எரிந்ததால் காற்று மாசடைந்து, அந்தப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கும், குழந்தைகளுக்கும் சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

மதுபானக் கடை: இதேபோல, கே.கே.நகா் ராஜமன்னாா் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT