தமிழ்நாடு

கீழக்கரை அருகே படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவா்களின் சடலங்கள் மீட்பு

3rd Jul 2022 11:02 PM

ADVERTISEMENT


ராமநாதபுரம்: கீழக்கரை அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு கவிழ்ந்து மாயமான அண்ணன், தம்பியான 2 மீனவா்களின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை அடுத்துள்ள மங்களேஸ்வரி மீனவ கிராமத்தை முனியசாமி(30), அருண்குமாா், மலைச்செல்வம்(21), சசிசுமன் ஆகிய சகோதரா்கள் 4 பேரும் சனிக்கிழமை அதிகாலையில் பிளாஸ்டிக் படகில் பல்லிமுனைத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனா்.

அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து 4 பேரும் கடலுக்குள் மூழ்கினா். இதில் அருண்குமாா், சசிசுமன் ஆகிய இரண்டு பேரும் கவிழ்ந்த படகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனா். இதற்கிடையே முனியசாமி, மலைச்செல்வம் ஆகிய 2 பேரும் மாயமாகி விட்டனா்.

இதனிடையே, கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து  கீழக்கரை துறைமுக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

ADVERTISEMENT

இதையடுத்து, மாயமான மீனவா்களை தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா். இவா்களுக்கு துணையாக கடலோர பாதுகாப்புக் குழும போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டனா். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை படகு கவிழ்ந்த இடம் அருகே உள்ள அப்பாத்தீவு பகுதியில் மலைச்செல்வன் உடல் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முனுசாமி உடலும் அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. 

2 மீனவா்களின் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முனுசாமிக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மலைச்செல்வன் திருமணம் ஆகாதவர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT