தமிழ்நாடு

பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்: ராமதாஸ் 

DIN

கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வால் தொழில் துறையும், வேளாண் துறையும் வீழ்ச்சியை சந்திக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 18 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, குறிப்பாகத் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். 

சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிற பொருட்கள் மற்றும் சேவைகளை விட வெட் கிரைண்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், பம்ப் செட் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வரி உயர்வால் தொழில் துறையும், வேளாண் துறையும் வீழ்ச்சியை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெட் கிரைண்டர்கள் மீதான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகும். 2017-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கிரைண்டர்கள் மீது 4 சதவீதம் மட்டுமே மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. 

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது கிரைண்டர்களை ஆடம்பர பொருளாக அறிவித்து, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக கிரைண்டர்கள் மீதான வரி முதலில் 12 சதவீதமாகவும், பின்னர் 2019-ஆம் ஆண்டில் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

அதிக வரி விதிப்பால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த கிரைண்டர் உற்பத்தித் தொழில், வரி குறைப்புக்குப் பிறகு தான் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், கிரைண்டர்கள் மீதான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டால், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரைண்டர்களின் விலை ரூ.600 வரை அதிகரிக்கும். 40 லிட்டர் கொள்ளளவுள்ள கிரைண்டர்களின் விலை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயரும். விலை உயர்வின் காரணமாக விற்பனை கடுமையாகப் பாதிக்கும். அத்தகைய சூழலில் கோவையில் நடைபெற்று வரும் கிரைண்டர்கள் உற்பத்தி மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான வரி உயர்வும் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பம்ப்செட் தொழில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உதிரிப்பாகங்களுக்கு 18-28 சதவீத வரி, பணி ஒப்பந்தங்களுக்கு 18 சதவீத வரி, விற்பனையின் போது 12 சதவீத வரி என பல்வேறு நிலைகளில் 48-58 சதவீத வரி செலுத்தி வருகின்றனர். இதனால், பம்ப்செட்டுகளின் விலை அதிகரித்திருப்பதுடன், அதன் உற்பத்தியாளர்களுக்கான லாபமும் குறைந்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பம்ப்செட்டுகள் மீதான விலை 10% வரை உயரக்கூடும். அது அந்தத் தொழிலைக் கடுமையாகப் பாதிக்கும். பம்ப்செட்டுகளின் விலை உயர்வு தொழில்துறையை மட்டுமின்றி வேளாண்மை தொழிலையும் பாதிக்கும் என தெரிவித்துள்ள அவர்,

வெட்கிரைண்டர், பம்ப்செட் உற்பத்தியின் தலைநகராகத் திகழ்வது கோயம்புத்தூர் தான். கோவையில் மட்டும் 100 பெரிய நிறுவனங்கள், 900 சிறிய நிறுவனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். 

அதேபோல், கோவையில் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பம்ப்செட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பாதிப்பு அவர்களுடன் மட்டும் நின்று விடாது. ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும். இந்த ஆபத்து போக்கப்பட வேண்டும்.

மேலும், மற்றொருபுறம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.50 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. அத்துடன் 2.50 சதவீதம் வேளாண் தீர்வை, 0.75 சதவீதம் சமூக நலக் கூடுதல் வரி, 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 18.75 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும். 

தங்கம் என்பது பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இந்தியப் பண்பாடு உருவாக்கி வைத்துள்ள வழக்கங்களின்படி, ஏழைகளும் அவர்கள் வீட்டுப் பெண்களின் திருமணத்திற்காகத் தங்க நகைகளைப் போட வேண்டும்.

ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்குத் தங்க நகைகள் வாங்கினால், அதற்கு வரியாக ரூ.18,750, சேதாரமாக சுமார் ரூ.12,000 என மொத்தம் ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இந்த அளவுக்குக் கூடுதல் நிதிச்சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது எனவும், இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலம் தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. கடந்த கால அனுபவங்கள் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கவில்லை.

இறக்குமதி வரியை உயர்த்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது; மாறாக, தங்கக் கடத்தல் தான் அதிகரிக்கும். அத்துடன் தங்கத்தின் விலை ஏழை மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயரும். இது விரும்பத்தக்கதல்ல. 

எனவே, வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரி உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதால், அதைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசைத் தமிழ்நாடு அரசும் கேட்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT