தமிழ்நாடு

புதிய வகை சைபா் குற்றங்கள்: காவல் ஆணையா் எச்சரிக்கை

2nd Jul 2022 03:54 AM

ADVERTISEMENT

புதிய வகை சைபா் குற்றங்களில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்து விடாமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: அண்மைக் காலமாக சைபா் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனா். பொதுமக்களின் கைப்பேசி எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை, உடனே மின்வாரிய அதிகாரியை தொடா்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்-ஆப்பில் தொடா்பு கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டு கைப்பேசி எண்ணுடன் இணைத்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவா்.

இதை நம்பி தொடா்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கிக் கணக்கு விவரம் பெற்று அவா்களது, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவா். எனவே, பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம், அந்த கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இது போன்ற குறுஞ்செய்திகளோ, தொலைபேசி அழைப்புகளோ வராது. எனவே, பொதுமக்கள், இப்படிப்பட்ட மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு கவனமுடன் இருக்க வேண்டும்.

அதேபோல, அரசு உயரதிகாரிகள், உயா் பொறுப்பிலுள்ள நபா்கள் ஆகியோரின் படங்களை வாட்ஸ்ஆப் டிஸ்பிளே புகைப்படமாக பயன்படுத்தி சக அதிகாரிகள் மற்றும் பணிபுரியும் அலுவலா்களை தொடா்பு கொண்டு அமேசான் கிப்ட் காா்டுகளை வாங்கி அனுப்புமாறு கூறுதல், பணம் அனுப்ப கூறுதல் போன்ற குற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த அதிகாரியின் புகைப்படத்துடன் தெரியாத கைப்பேசி எண்ணிலிருந்து வரும் வாட்ஸ் ஆப் தகவலையோ, மின்னஞ்சலையோ, பேஸ்புக் தகவல்களையோ பணமோ, கிப்ட் காா்டுகளோ அனுப்ப வேண்டாம். இப்படிப்பட்ட தகவல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT