தமிழ்நாடு

மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை: முதல்வர் ஸ்டாலின்

DIN

கரூர்: தான் இருக்கும் இடத்தை காட்டிக்கொள்வதற்காக நாள்தோறும் மைக்கை நீட்டி அதன் முன் வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் கூற நான் தயாராக இல்லை என்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கரூரில் திருமாநிலையூர் திடலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபுசங்கர் வரவேற்றார். நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கேஎன்.நேரு, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர், கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, மாகராட்சி மேயர் கவிதாகணேசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் ரூ.581.44 கோடி மதிப்பில் 99 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை துவக்கி வைத்தும், ரூ.500.83 கோடி மதிப்பில் 80,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர்  வழங்கினார். 

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேகையில், கரூர் மாவட்டத்தில் இந்த ஓராண்டு காலத்தில் கோடிக்கணக்கான திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. புதுசா ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்திடம் முதல் ஆறுமாதத்திற்கு எதையும் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு பின்புதான் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற நொடி முதலே செயல்படக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. ஏனென்றால் கருணாநிதி என்னுள் இருந்து என்னை இயக்கிக்கொண்டிருக்கிறார். 
தலைவர் இருந்தால், என்ன நினைப்பார், எப்படியெல்லாம் செயல்படுவார் என நித்தமும் சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்த ஓராண்டுக்குள் திட்டமிட்டோம், செயல்பட்டோம், உருவாக்கினோம். மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவோம் என்றோம், நிறைவேற்றியிருக்கிறோம், பள்ளபட்டி பேரூராட்சியை நகராட்சியாக்குவோம் என்றோம், செய்துகாட்டினோம். கரூரில் சுற்றுவட்டச்சாலை, காமராஜர் சந்தையில் வணிக வளாகம் என அறிவித்ததை செயல்படுத்தியுள்ளோம். 

சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்றோம். அதற்கான பணிகள் நடந்துவருகிறது. இந்த மாவட்டத்தின் தொழில்முனைவோர்களிடம் சந்தித்து நேற்று கலந்துரையாடினேன். திமுக ஆட்சியில் கிடைத்த நன்மைகளுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கையின்படி, இந்த மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வகையில் கரூரில் ஜவுளி கண்காட்சி அரங்கம், வளாகம் அமைக்கப்படும். 

கரூரில் உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளியின் தரத்தை பரிசோதிக்க சர்வதேச தர பரிசோதனை மையம் இங்கு அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.47 கோடியில் திருமாநிலையூரில் புதிய பேரூந்துநிலையம் அமையும். மற்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி நிறைவேற்றப்படும். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு செய்துள்ள சாதனையைப் பார்க்கும் போது மன நிறைவு அடைகிறேன். 

இந்த ஓராண்டுகாலம் எனக்கு மன நிறைவுத்தருகிறது. மனசாட்சித்தான் நீதிபதி. மக்களின் மனதில் மகிழ்ச்சியை பார்க்கிறேன். திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக இருக்கிறது. மக்கள் பணி செய்யவே நேரம் கிடைக்கவில்லை. இதனால்தான் அரைகுறையான பதில் கூறுபவர்களுக்கு பதில் சொல்ல நேரமோ, தயாராகவோ இல்லை. திமுக ஆட்சியின் சாதனையை பொதுமக்களிடம் ஊடகங்கள் கேட்க வேண்டும், நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும், அதை செய்து தர தயாராகி இருக்கிறோம். அனைவரின் கருத்தைக் கேட்டு செயல்படுத்தவே நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பதும் மட்டும்தான் நடக்கவேண்டும் என நினைப்பவன் நான் அல்ல. மக்களின் கருத்துக்களை பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 

தான் இருக்கும் இடத்தை காட்டிக்கொள்வதற்காக நாள்தோறும் மைக்கை நீட்டி அதன் முன் வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் கூற நான் தயாராக இல்லை. திமுக ஆட்சியை விமர்சனம் செய்து, அதில் என்னை இழுத்து கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிரபலம் அடையலாம் என நினைப்பவர்களை நினைத்து வருத்தமடைகிறேன்.

உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, முதல்வர் நாற்காலியை கொடுத்து நமக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் உள்ள உங்களுக்கு என்றென்றும், எந்நாளும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். இந்த மாவட்டம் முன்பு கருவூர் என்றழைக்கப்பட்டது. 99 வயது வரையும் தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட்ட கலைஞரை சட்டமன்ற உறுப்பினராக்கிய மாவட்டம் இந்த மாவட்டம். கரூர் மாவட்டம் கொசுவலை, வாகனங்களுக்கு கூண்டு கட்டுதல், ஜவுளி ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக மாவட்டம் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை என்றார் அவர். தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT