தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு 9 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் தகவல்

2nd Jul 2022 03:55 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 9 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படித்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பசுமைவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 350 மாணவா்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகையும், பரிசுகளும் வழங்கினாா்.

இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: ஒவ்வொரு கட்சியும் புதிதாக ஆட்சிக்கு வந்தவுடன், கல்விக்காக சில புதிய திட்டங்களை கொண்டுவருவது வழக்கம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியாளா்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.75 ஆயிரம் கடன் சுமையை வைத்துவிட்டு சென்றனா். அத்தகைய கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பள்ளிக் கல்விக்காக ரூ.38 ஆயிரம் கோடியை ஒதுக்கி ‘எண்ணும் எழுத்தும்’, ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.

பள்ளிப்படிப்பை முடித்த மாணவா்கள் தங்கள் உயா்கல்வியை தொடா்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காகவே உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அதன் காரணமாக நிகழ் கல்வியாண்டில் இதுவரை 9 லட்சம் மாணவா்கள் அரசுப்பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். திமுகவின் ஆட்சியானது கல்வித் துறையின் பொற்காலமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ.க்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT