தமிழ்நாடு

21-ம் நூற்றாண்டிலும் பாதை வசதி இல்லாத கிராமம்: 50 ஆண்டுகளாக வயலில் நடந்து செல்லும் அவலம்!

1st Jul 2022 10:33 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு ஊராட்சியின் கீழ் அமைந்துள்ளது ஆண்டிவயல் கிராமம். இந்தப் பகுதியில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயக் கூலித் தொழிலை மட்டுமே நம்பி தங்களுடைய வாழ்வாதாரங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியை சுற்றிலும் வயல்வெளி சூழ்ந்து ஒரு தீவுபோல் உள்ளது இந்த கிராமம். இவர்கள் சாலைக்கு செல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் வயல்வெளியில் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழைக் காலங்களில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக இருக்கும் நிலையில், இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்கின்றனர். 

இந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மழைக் காலங்களில் நடந்து செல்லும்போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  அத்தோடு இவர்களின் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வயல்வெளியில் தேங்கியுள்ள மழை நீரில் நனைந்து விடுகிறது. இதனால் சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

ADVERTISEMENT

அதுபோல, இப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் பிணத்தை வயல்வெளியில் உள்ள சேற்றில் தூக்கிச் செல்ல முடியாத நிலையில் ஒரு இரும்புச் சீட்டில் வைத்து இழுத்துச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிலும் மிகவும் வயதான முதியவர்கள் மழை காலங்களில் கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்களாக வீட்டை விட்டு வெளியில் செல்வதே இல்லை. இப்படி ஒரு தனித் தீவு போன்ற பகுதியில் வசித்து வரும் ஏழ்மை நிலையில் உள்ள இப்பகுதி மக்களின் துயர் துடைக்க அரசு உடனடியாக இப்பகுதி மக்களுக்கு பாதை அமைத்து தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT