புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநில மின் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில், புதுவை மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், புதுச்சேரியில் ஐஎன்டியூசி தொழிற்சங்கம், விசிக தொழிற்சங்கம், ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், டைபி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் கே.சேது செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்சார பராமரிப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.