மதுரவாயல் காவல் நிலையத்தில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி புகார் கொடுக்க வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் டி-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி, தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் தான் கடந்த 1ஆம் தேதி மதுரவாயல், கிருஷ்ணாநகர், நூம்பல் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் தனது கார் மீது மோதி தகராறு செய்ததாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து டி-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க- மாட்டுக்கு முன்பு சிறுநீர் கழித்ததாக இஸ்லாமியருக்கு அடி உதை...மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்
இந்நிலையில் டி-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிய சுபாஷின் அடையாள அட்டையைக் காண்பிக்க சொல்லி, அந்த அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்தபோது மேலும் சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சுபாஷ் கொடுத்த அடையாள அட்டை போலி என்றும், சுபாஷ் ஐஏஎஸ் அதிகாரி அல்ல என்பதும் தெரியவந்தது.
அதன்பேரில், டி-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி வலம் வந்த சுபாஷை கைது செய்து, அவரிடமிருந்து போலி அரசு அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சுபாஷ் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.