கடலூர்: அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், பணியாளர்கள் தங்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
தமிழகத்தில் சிற்றூராட்சிகளில் அம்மா மினி கிளினிக் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் மருத்துவமனையில் கடலூர் மாவட்டத்தில் 66 மருத்துவமனைகள் தொடங்கப்பட்டது.
மருத்துவமனைக்கு தலா ஒரு மருத்துவர், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மருத்துவர்களுக்கு ரூ.60 ஆயிரமும், மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரமும் மாத சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிளினிக்குகள் செயல்பட தொடங்கின.
இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
இந்நிலையில், கிளினிக் செயல்படவில்லை என்று திமுக அரசு அறிவித்தது. எனினும் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் முதல் இவர்கள் மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை மாலையில் மருத்துவர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாய்மொழி அறிவிப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் இன்று சனிக்கிழமை காலை துணை இயக்குநர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். தங்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!