தமிழ்நாடு

'இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல் திருக்குறள்'

27th Jan 2022 05:27 AM

ADVERTISEMENT

 

மதுரை: இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக் கூறும் நூலாக திருக்குறள் உள்ளது என்று பாஜக மாநிலப் பொதுச் செயலர் ராம. சீனிவாசன் கூறினார். 

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவு சார்பில் உலக பொதுமறை திருக்குறள் மாநாடு மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார். 

மாநாட்டில் பாஜக மாநிலப்பொதுச்செயலர் ராம. சீனிவாசன் பேசியது: திருக்குறள் உலகப் பொது மறை நூலாகக் கூறப்படுகிறது. ஆனால், திருக்குறள் உலக பொதுமறை நூல் அல்ல. அது இந்துத்துவ கருத்துகளை எடுத்துக்கூறும் நூல். உலகில் உள்ள எந்தச் சமயத்திலும் ஊழ்வினைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்து சமயத்தில் மட்டுமே ஊழ்வினைப் பற்றி கூறப்பட்டுள்ளது. திருக்குறளிலும் ஊழ்வினைப் பற்றிய குறள்கள் உண்டு. எனவே, திருக்குறள் இந்துத்துவ கருத்துக்களை உலகுக்கு கொண்டு செல்லும் நூலாகும்.

ADVERTISEMENT

திருவள்ளுவரை இந்து இல்லை என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன. திருவள்ளுவர் இந்து இல்லை என்றால் நாட்டில் உள்ள வேறு யாருமே இந்துவாக இருக்க முடியாது.  களத்தில் போராடுவதை விட கருத்தியல் ரீதியாகப் போராட வேண்டும் என்றார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்: தமிழக அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால், கட்டாய மதமாற்றத்தை முழுநேரப் பணியாகச் செய்து வருபவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதைத்தான் தவறு என்று கூறுகிறோம். மாணவி அனிதா மரணத்திலும், மாணவி லாவண்யா மரணத்திலும் திமுகவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT