தமிழ்நாடு

விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை

27th Jan 2022 02:23 AM

ADVERTISEMENT

 

சென்னை: விக்கிரவாண்டி அருகே தரமற்ற உணவு வழங்கிய 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் புகாா்களை ஒட்டி மாமண்டூா் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை முதல் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை நிறுத்தத் தடை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் குழு, போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை தனியாா் உணவகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அதில் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்றது கண்டறியப்பட்டது. இந்த உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், சம்பந்தப்பட்ட உணவகங்களின் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். குறைந்த தரம் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்படும் என அமைச்சா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT