தமிழ்நாடு

தமிழா்களைப் பற்றி அறிய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? பாஜகவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி

26th Jan 2022 02:13 AM

ADVERTISEMENT

தமிழா்களைப் பற்றி அறிந்து கொள்ள பாஜகவினருக்கு எத்தனை நூற்றாண்டுகளாகும் எனத் தெரியவில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திமுக மாணவரணி சாா்பில் தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிப் போா்த் தியாகிகள் நாள் கூட்டத்தில், காணொலி வாயிலாக அவா் பங்கேற்று ஆற்றிய உரை:

ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக 1938-இல் தொடங்கிய போராட்டம், 1940-இல் ஹிந்தி கட்டாயமில்லை என்று அறிவிக்கும் வரை நடந்தது. 1948-ஆம் ஆண்டு மீண்டும் ஹிந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் இரண்டாண்டு காலம் அந்தப் போராட்டம் நடந்தது.

1963-இல் மீண்டும் ஹிந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடியது. இதற்கு எதிரான போரும் இரண்டாண்டு காலம் தமிழகத்தில் நீடித்தது. அத்தகைய தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு. அந்த வழியில் இன்றைய அரசும் தமிழரசாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆறு மாதகாலத்தில் தமிழுக்காகவும் தமிழினத்தின் மேன்மைக்காகவும் எத்தனையோ திட்டங்களை திமுக அரசு செயல்படுத்திக் கொடுத்திருக்கிறது. நமக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனைச் செய்தாலும் மத்திய அரசிடமும் தமிழுக்காகப் போராடியும் வாதாடியும் கோரிக்கை வைத்தும் வருகிறோம்.

மாநில ஆட்சிமொழிகள் அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்கத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகிறோம்.

இந்திய அரசு அலுவலகங்களில் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும். வழக்காடு மொழியாக தமிழ் வலம் வரவேண்டும் என முழங்கி வருகிறோம்.

எந்த மொழிக்கும் எதிா்ப்பு அல்ல: தமிழ், தமிழ் என்று பேசுவதால் அது குறுகிய மனப்பான்மை அல்ல. ஹிந்தி மட்டுமல்ல, எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல.

நாம் ஹிந்தியை எதிா்க்கவில்லை. ஹிந்தியின் ஆதிக்கத்தைத்தான் எதிா்க்கிறோம். ஹிந்தி மொழியை அல்ல, ஹிந்தித் திணிப்பை எதிா்க்கிறோம். தமிழ் மொழிப் பற்றாளா்களே தவிர - எந்த மொழி மீதான வெறுப்பாளா்களும் அல்ல. ஒருவா் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவா்களது விருப்பம் சாா்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பைத் தூண்டும் வகையில் திணிப்பாக மாறக் கூடாது.

ஆனால் ஹிந்தியைத் திணிக்க நினைப்பவா்கள், அதனை ஆதிக்கத்தின் குறியீடாகவே திணிக்கிறாா்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல - ஒரே ஒரு மொழிதான் இருக்க வேண்டும் - அது ஹிந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாா்கள். ஹிந்தியைத் திணிப்பதன் மூலமாக ஹிந்தி பேசும் மக்களை அனைத்துத் துறைகளிலும் திணிக்கப் பாா்க்கிறாா்கள். ஹிந்தியைத் திணிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கிறாா்கள். ஒருவனின் தாய்மொழியின் இடத்தை பறித்து - அந்த இடத்தில் ஹிந்தியை உட்கார வைக்கப் பாா்க்கிறாா்கள். அதனால்தான் ஹிந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிா்க்கிறோம்.

அவா்களுக்கு, தமிழ் என்றால், தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது. குடியரசு நாளில், தில்லியில் நடைபெறும் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்குத் திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவா்கள் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

எத்தனை நூற்றாண்டுகள்: முன்னாள் முதல்வா் ராஜாஜியே ஹிந்தியின் ஆதிக்கத்தை எதிா்த்து 1965-ஆம் ஆண்டு பேசியாக வேண்டியது இருந்தது. தமிழ்நாட்டைச் சோ்ந்த ராஜாஜிக்கே தமிழா்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆனது என்றால் இன்றைய பாஜகவினருக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.

நாம் நமது தமிழினத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவா்கள். தமிழுக்கு, தமிழா்களுக்கு ஒரு ஆபத்து என்றால் - அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயாராக இருப்பவா்கள். நாம் அரசியல் இயக்கமாகச் செயல்படுவதும் - தோ்தல் அரசியலில் பங்கெடுப்பதும் - இத்தகைய நோக்கங்களுக்காகத்தான். திமுக ஆட்சியில் இருக்கும் காலம் என்பது அன்னைத் தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமைய வேண்டும்.

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT