தமிழ்நாடு

தரமற்ற உணவு: விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை

26th Jan 2022 01:01 PM

ADVERTISEMENT


தரமற்ற உணவு வழங்குவது ஆய்வில் தெரிய வந்ததையடுத்து, விக்கிரவாண்டி அருகே 5 பயண வழி உணவகங்களில் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களிலும் சுகாதாரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது ஆய்வில் தெரிய வந்ததையடுத்து, அங்கு, அரசுப் பேருந்துகள் உணவுக்காக நின்றுச் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், இந்த 5 உணவகங்களுடன் அரசுப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதகாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தரமற்ற உணவு வழங்கிய செங்கல்பட்டு அருகே மாமண்டூா் பயண வழி உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று உத்தரவிட்ட நிலையில், தற்போது விக்கிரவாண்டி உணவகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமண்டூர் பயண வழி உணவகத்துக்கு தடை விதித்து அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) கட்டுப்பாட்டின் கீழ் ஒப்பந்ததாரா் நடத்தும் மாமண்டூா் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகாா்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுத்தும், குறைகளை நிவா்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. எனினும், விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட போது, அந்த உணவகத்தில் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாத நிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள், மாமண்டூா் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி

உடனடியாக அந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் நாள்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். தரம் குறைவான உணவு மற்றும் கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்படும் என அமைச்சா் கூறியிருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT