தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் வியாபாரம் அடியோடு பாதிப்பு

25th Jan 2022 03:17 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இருக்கிறது. இங்கு தினசரி கடைகளும், வாரச் சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும்.

இந்த வாரச் சந்தையில் மகாராஷ்டிரம் ,ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி, செங்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். இங்கு சாதாரண நாட்களைவிட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் கரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக ஏற்கனவே பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜவுளிச் சந்தை கூடியது. இரவு நேர ஊரடங்கு காரணமாக வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.  

உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரமும் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது. இன்று வெறும் 5 சதவீதம் மட்டுமே சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களுக்கு இதே நிலைமைதான் தொடரும் என தெரிவித்தனர்.

பொதுவாக ஜவுளிச் சந்தை நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில்தான் பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், தற்போது இரவு நேர ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வர முடியவில்லை. இதனால் கடந்த மூன்று வாரமாக ஜவுளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT