தமிழ்நாடு

காலமானார் டாக்டர் வீ. கிருஷ்ணன்

25th Jan 2022 10:24 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் குப்புலட்சுமி கணவருமான டாக்டர் வீ. கிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். 

இவரது உடலுக்கு அரசியல்  பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளராக 33 ஆண்டுகளாக பதவி வகித்தவர் டாக்டர் வி. கிருஷ்ணன். தற்போது வாழப்பாடி ஒன்றிய திமுக அவைத்தலைவராக இருந்து வந்தார். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்து வந்த இவர், வாழப்பாடி அக்ரோ கூட்டுறவு சங்க தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். 

ADVERTISEMENT

இவரது மனைவி குப்புலட்சுமி கிருஷ்ணன் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தார். இவரது மகன் வீரேந்திரதுரை,  வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளராக உள்ளார்.

மற்றொரு மகன் தம்பிதுரை, இலண்டனில் இந்திய முறை உணவகம் நடத்தி வருகிறார்.  சேலம் மாவட்ட திமுகவில், ஆரம்ப காலக் கட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்த டாக்டர் வி. கிருஷ்ணன், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார் . இவரது உடல் வாழப்பாடி அக்ரஹாரம் கணபதி கவுண்டர் தெருவிலுள்ள அவரது இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது உடலுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடல் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4  மணியளவில் வாழப்பாடியில் நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT