தமிழ்நாடு

வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; 4 பேரிடம் விசாரணை 

24th Jan 2022 04:15 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு பகுதியில் ஒருநாட்டு வெடிகுண்டு வெடித்தது மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தெற்கு கோட்டையில் காலனி குடியிருப்பு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின சக்கரம் ஏறியதில் நிலத்துக்குள் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

இது குறித்து தகவலறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் பாலாஜி, கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சிவலிங்கசேகர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது அதே பகுதியில் நிலத்துக்குள் கிடந்த ஆறு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து மதுரை சரக டிஐஜி பொன்னி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் அப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  மாரிச்சாமி,  அழகர்சாமி, முருகன், முத்தையா ஆகிய 4 பேரை பிடித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்துள்ள சம்பவம் காவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.18) வத்திராயிருப்பு அருகே உள்ள வ. புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் பகுதியில் மூன்று பேரிடம் இருந்த ஒன்பது நாட்டு வெடிகுண்டுகளை காவலர்கள் கைப்பற்றினர். அதில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்பாக மேலும் சிலரை காவலர்கள் தேடி வருகின்றனர். இதையடுத்து கைப்பற்றிய 9 நாட்டு வெடிகுண்டுகளையும் சனிக்கிழமை மதுரையிலிருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT