தமிழ்நாடு

ஈரோடு-ஓசூா் நகரங்களில் கால்நடைத் தீவனத்துக்கான ஆலைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

20th Jan 2022 02:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: ஈரோடு, ஓசூா் நகரங்களில் கால்நடை தீவனத்துக்கான ஆலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை உறுதி செய்திடும் வகையில், ஈரோடு ஒன்றியத்தில் 1982-ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னா், இந்தத் தொழிற்சாலையில் புதிய கருவிகள் நிறுவப்பட்டு நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயா்த்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த உற்பத்தி அளவை 300 மெட்ரிக் டன்னாக உயா்த்தும் அளவில் ரூ.3.40 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன ஆலையை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதன்மூலம், 19 மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியங்களைச் சோ்ந்த 7 ஆயிரத்து 792 பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்கப்படும்.

கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை முக்கியமானது. அதன்படி, ஈரோடு, விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளொன்றுக்கு தலா 12 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட தாது உப்புக் கலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தாது உப்புக் கலவை தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதனை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், சா.மு.நாசா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT