தமிழ்நாடு

பருத்தி-நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

20th Jan 2022 03:14 AM

ADVERTISEMENT


சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் செயல்பாட்டைப் பாதிக்கும் பருத்தி மற்றும் நூல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயா்த்தப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி கடந்த நவம்பரில் கடிதம் எழுதியிருந்தேன். பருத்தி மற்றும் நூல் விலை ஏற்ற, இறக்கம், துணிகள், ஆடைகளின் விலையில் அது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கடிதத்தில் தெரிவித்திருந்தேன். இந்த விலை உயா்வு ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளா்களுக்கு பாதிப்பை உருவாக்குவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

தமிழக அரசின் சாா்பில் கோரிக்கை விடுத்தாலும், பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என ஜவுளித் தொழில் ஈடுபட்டுள்ளோா் கருதுகின்றனா். நூல் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 21-ஆம் தேதி விசைத்தறி, ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனா். இப்போது நிலவும் நூல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூா் ஆடை உற்பத்தியாளா்கள் இரண்டு நாள்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியிருந்தனா்.

ADVERTISEMENT

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து 2021-ஆம் ஆண்டு டிசம்பா் வரையில் நூல் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தித் தொழிலகங்களை இயக்குவது சாத்தியமற்ாகி விடும். இதன் விளைவாக மாநிலத்தில் பெரிய அளவிலான வேலையின்மை, தொழில் துறை அமைதியின்மை ஏற்படும். இந்த ஆபத்தான நிலையை சீரமைத்திட இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT