தமிழ்நாடு

குமரியில் மீண்டும் படகுப் போக்குவரத்து தொடக்கம்

20th Jan 2022 03:44 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு 12 நாள்களுக்குப் பின்னர் புதன்கிழமை முதல் மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிக்கு கடந்த 7 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 12 நாள்களுக்குப் பின்னர் புதன்கிழமை காலை 8 மணிமுதல் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கியது.
கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் படகில் பயணம் செய்தனர். மேலும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில்,  திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT