தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஒரே கட்டமாக நடத்த அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

20th Jan 2022 04:29 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் வெ.பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி தலைமையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா முன்னிலையிலும் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் வழக்குரைஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், சுந்தர் எம்எல்ஏ, அதிமுக சார்பில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் துணைத் தலைவர் தாமோதரன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி நவாஸ், தமிழக பாஜக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மேயரும் (பொறுப்பு) சென்னை மண்டல உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர். எத்தனை கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரசாரத்தின்போதும், வாக்குப் பதிவின்போதும் எவ்வாறு கடைப்பிடிப்பது போன்றவை குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தன. கூட்டத்தைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் கணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்துக்குப் பிறகு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறியது:
கிரிராஜன் (திமுக): அண்மையில் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடைப்பிடித்த நேரத்தைப் போலவே இந்தத் தேர்தலிலும் நேரக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
பொள்ளாச்சி வி.ஜெயராமன்(அதிமுக): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதுடன், சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
தாமோதரன் (காங்கிரஸ்): வாக்குப் பதிவு நேரத்தை காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும். கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கும் வகையில் கடைசி 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
கரு.நாகராஜன் (பாஜக): பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த இடங்கள் துணை ராணுவப் படை வசம் ஒப்படைக்க வேண்டும். தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT