தமிழ்நாடு

கடையத்தில் ரூ. 2 கோடியில் செல்லம்மாள் பாரதி மையம் 

20th Jan 2022 03:42 AM

ADVERTISEMENT


அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் சேவாலயா சார்பில் ரூ. 2 கோடி மதிப்பில் அமையவுள்ள செல்லம்மாள் பாரதி மையத்துக்கு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம் அமைக்க சேவாலயா நிறுவனம் முடிவு செய்தது.  இதையடுத்து பாரதியார் பெயரில் கடையத்தில் இயங்கி வந்த நூலகக் கட்டடத்தைப் புதுப்பித்து அங்கு செல்லம்மாள் பாரதி மையம் அமைத்து, பாரதி செல்லம்மாளின் முழு உருவச் சிலையும் அமைத்து தருவதாகவும்,  அதற்கு அனுமதி தருமாறும் கோரியதையடுத்து நூலகத் துறை அதற்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து செல்லம்மாள் பாரதி மையம் அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு  அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்துப் பேசியதாவது:  பாரதியார் காசியில் தங்கியிருந்தபோது அவரை கடையத்துக்கு  வரச்சொல்லி செல்லம்மாள் கடிதம் எழுதியதற்கு, பதில் எழுதிய பாரதி, கவலைப்படாதே, அச்சம் கொள்ளாதே, அச்சமாக இருந்தால் தமிழைப் படி, தமிழைக் கற்றுக் கொண்டே இரு,  தமிழைப் படித்துக் கொண்டே இரு அச்சம் வராது என்று பதில் எழுதினார். 
கால்டுவெல்லுக்கு முன்பே உலக மொழிகளில் சிறந்த மொழி தமிழ் மொழி என்று கூறியவர் பாரதி. இந்திய தேச ஒற்றுமையை உணர்த்தும் வகையில் 30 கோடிமுக முடையாள் என்றும் சிந்தனை ஒன்றுடையாள் என்றும் பாடியவர் பாரதி.   
பாரதி தனது குடும்பத்துக்காகவோ, உறவினர்களுக்காகவோ வாழவில்லை. இந்திய நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் வாழ்ந்தார். தான் ஒரு இந்தியன் என்று கூறி பெருமையோடு வாழ்ந்து சென்றவர் பாரதி. 
1973-ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டை நினைவு சின்னமாக்கியவர் கருணாநிதி. இன்று ஸ்டாலின் பாரதியாரின் நினைவு நாளை அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறார் என்றார். 
நிகழ்ச்சியில்,  இசைக்கவி ரமணன், பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி ஆகியோர் இணையம் மூலம் வாழ்த்திப் பேசினர். 
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி செளந்தர்யா, மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம்,  திமுக மாவட்டப் பொறுப்பாளர் பொ. சிவபத்மநாபன்,  எம்எல்ஏக்கள் எழும்பூர் பரந்தாமன்,  சங்கரன்கோவில் ஈ. ராஜா,  மாவட்டக் குழு உறுப்பினர் மைதீன்பீவி, திமுக ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், ஒன்றியப் பெருந்தலைவர்கள் கடையம் செல்லம்மாள், கீழப்பாவூர் காவேரி, ஆலங்குளம் திவ்யா மற்றும் ஊராட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நூலகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
சேவாலயா நிறுவனர் தலைவர் முரளிதரன் வரவேற்றார். அறங்காவலர் நாராயணன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT