தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த ஆண்டில் காசநோய் பாதிப்பு 17% அதிகரிப்பு

18th Jan 2022 02:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 82,000 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் ஊரடங்கு தளா்வுகள் அதிகமாக இருந்ததே காசநோய் பரவல் சற்று உயா்ந்ததற்கான காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பு விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 21.38 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்திருந்தன.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 82,352 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 18,016 பேரும், அரசு மருத்துவமனைகளில் 64,336 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020-இல் அந்த எண்ணிக்கை 17 சதவீதம் குறைவாக இருந்தது. அதாவது, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 70,545 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனா். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏறத்தாழ காசநோய்க்கும், கரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலா் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டது கூட அந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

அதேபோன்று பொது முடக்க தளா்வுகளின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதுவும் காசநோய் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT