தமிழ்நாடு

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: கட்டுப்பாடுகளால் களையிழந்தது

18th Jan 2022 11:38 AM

ADVERTISEMENT


கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் பூச பெருவிழாவில் 7 திரைகள் விலக்கப்பட்டு 6 கால ஜோதி தரிசனம் நடைபெறும். 

அதன்படி 151ஆவது தைப்பூசம் விழா திங்கள்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று  காலை 6 மணிக்கு  நடைபெற்றது. 

வள்ளலாரின் பாடல்கள் பாடப்பட்டு 7 திரைகள் விலக்கப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் நேரடியாக ஜோதி தரிசனம் காண அனுமதிக்கப்படவில்லை. 

இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

ADVERTISEMENT

எனினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஏராளமாக குவிந்திருந்தனர். அதன் பின்னர் காலை 10 மணிக்கு இரண்டாம் கால ஜோதி தரிசனம் நடைபெற்றது.

 பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக ஜோதி தரிசனத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வள்ளலார் தெய்வ நிலையத்தின் அதிகாரப்பூர்வ யூடியப் சேனலான https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A ல் காணலாம். 

மேலும், கடலூர் மாவட்ட காவல்துறையின் https://www.facebook.com/100037780670110/videos/300309148802046/ என்ற இணைப்பிலும் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை அனுமதி

நாளை புதன்கிழமை காலை 5.30 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனம், 20 ஆம் தேதி வியாழக்கிழமை மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் திருஅறை தரிசனம் நிகழ்வுக்கு இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT