நீடாமங்கலம்: வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் மடத்தில் தைப்பூச திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் - கும்பகோணம் சாலையில் பாடகச்சேரி பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடகச்சேரி கிராமம்.
இந்த கிராமம் வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்தது. ராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த கிராமம் என்பதால் இந்த கிராமம் ஆன்மீக பூமியாகவும் சிறப்பிற்குரியது.
ராமலிங்க சுவாமிகளை பாடகச்சேரி மகான், பைரவசித்தர் என்றும் பக்தர்கள் அழைப்பர். ராமலிங்க சுவாமிகளுக்கு பாடகச்சேரியில் ஒரு மடம் உள்ளது.
இந்த மடத்தில் பக்தர்கள் தியானம் செய்து சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் அல்லது பாடகச்சேரி சுவாமிகள் (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர்.
வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் ஆற்றியவர். இத்தகைய சிறப்பிற்குரியவரான பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மடத்தில் செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ராமலிங்கசுவாமிகள் திருவுருவ படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமடத்தின் பூசாரி சேகர் என்கிற நாராயணசாமி சிறப்பு ஆராதனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். மதியம் அன்னதானம் நடந்தது.