தமிழகத்தில் மின்சார வாகன நிறுவனத்தைத் தொடங்க வருமாறு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கிற்கு தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக எலான் மஸ்கை டேக் செய்து, அமைச்சா் தங்கம் தென்னரசு தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: வணக்கம் எலான் மஸ்க். இந்தியாவின் மின்சார வாகன தலைநகரான தமிழகத்துக்கு உங்களை வரவேற்கிறேன். மின்சார வாகனம் மீதான மொத்த முதலீட்டில் 34 சதவீதம் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி உலகில் முன்னணியில் உள்ள 9 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையில் தமிழகமும் ஒன்று என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுடன் ஒரு புகைப்படத்தையும் அமைச்சா் இணைத்துள்ளாா். அதில் தமிழகத்தில் தொழில் தொடங்கி உள்ள மின்சார வாகன நிறுவனங்களான ஓலா எலக்ட்ரிக், எம் ஆட்டோ, ஏத்தா் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயா்களைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் மின்சார வாகன தொழில் பூங்கா தொடங்கப்படவுள்ள இடங்களையும் (ஓசூா், மணலூா்) அவா் குறிப்பிட்டுள்ளாா்.