காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து மாசடைவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பவானியில் காலிங்கராயன் தின விழாவில் அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்த ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது:
நதிகள் இணைப்புக்கு முன்மாதிரி வாய்க்காலான காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது கழிவுநீர் அதிக அளவு கலந்து வருகிறது. கரோனா காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்ததால் வாய்க்கால் தண்ணீர் சுத்தமாகச் சென்றது.
கரோனா தளர்வுகளுக்குப் பின்னர் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால் தற்போது அதிக அளவில் கழிவுநீர் கலந்து வருகிறது. காலிங்கராயன் வாய்க்காலில் செல்லும் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்ற தண்ணீராக உள்ளது. இதனைக் குடித்தால் புற்றுநோய், தோல் நோய், மலட்டுத்தன்மை உள்ளிட்ட நோய்ப் பாதிப்புகள் ஏற்படும்.
இந்தத் தண்ணீரைக் கொண்டு விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்களிலும் விஷத்தன்மை காணப்படும். இதனைப் பயன்படுத்துவோருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படும். காலிங்கராயன் வாய்க்காலில் தொழில்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பதோடு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாய்க்கால் தண்ணீர் மாசடைவது தடுக்கப்படும் என்றார்.