எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா் சிலை மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இனிப்புகளும் வழங்கினா்.
அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, வைகைச்செல்வன் உள்பட ஏராளமானோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மரியாதை செலுத்தியதுடன், ஏழை மக்களுக்கு நல உதவிகளையும் வழங்கினா்.
சசிகலா மரியாதை: தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆா் இல்லத்தில் அவரது சிலைக்கு சசிகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதிமுக ஆட்சியை மீண்டும் அமைப்போம் எனவும் சசிகலா சூளுரைத்தாா்.