தமிழ்நாடு

நெற்பயிரை அழிக்கும் எலிகளை பிடிக்க இடுக்கி அமைக்கும் விவசாயிகள்

18th Jan 2022 11:58 AM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிரை நாசம் செய்யும் எலிகளிடமிருந்து பாதுகாக்க இடுக்கி வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம்  இரண்டாம் போக சாகுபடி  துவங்கியது.

இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

தற்போது சுமார் 70  நாள் பயிர்களாக உள்ள நிலையில், இளம் நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்து வருவதால் பயிர்கள் வளர வழியின்றி கருகி வருகிறது, இதனால் பெருமளவு மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. 

ADVERTISEMENT

இதைத் தடுக்கும் பொருட்டு விவசாயிகள் வயல் வெளிகளில் திரியும்  எலிகளை இடுக்கி வைத்துப் பிடித்து வருகின்றனர்.

மூங்கிலால் செய்யப்பட்ட இந்த இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து விட்டு அதனை சுற்றியும் எலிகளுக்கு பிடித்த உணவாகிய அரிசி, நெல், நிலகடலை பருப்பு, தேங்காய்  ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவு வைத்து விட்டு மறு நாள் பார்க்கும் போது வயல் வெளிகளில் உள்ள எலிகள் அனைத்தும் இடிக்கியில் சிக்குகிறது. 

இதனால் பயிர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தற்போது இளம் நெற்பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்கின்றன. இதனை தவிர்க்கும் விதமாக எலி இடுக்கிகள் வாடகைக்கு வாங்கி வயல்களில்  ஆங்காங்கே வைக்கப்படுகின்றது.

இதில் எலிகள் சிக்கிக்கொள்கின்றன. இதனால் எலிகளால் பயிர்கள் நாசமாவது தவிர்க்கப்பட்டும், எலிகளின் உற்பத்தி குறைந்தும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT